< Back
மாநில செய்திகள்
ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டு யானை
மாநில செய்திகள்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டு யானை

தினத்தந்தி
|
29 Jun 2024 12:59 AM IST

மற்ற காட்டு யானைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானையை எதிர்பார்த்து ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கூடலூர், ஓவேலி வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் கூடலூர் தாலுகா ஓவேலியில் கேரளாவுக்கு செல்லும் குண்டம்புழா ஆற்றை நேற்று முன்தினம் 4 காட்டு யானைகள் கடக்க முயன்றது. அப்போது ஒரு காட்டு யானையை வெள்ளம் அடித்து சென்றது. இருப்பினும், யானை வெள்ளத்தை சமாளித்தவாறு ஆற்றை கடக்க முயன்றது.

ஆனால், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் காட்டு யானையால் ஆற்றை கடக்க முடியவில்லை. இதனால் 100 அடி தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் தண்ணீரில் மூழ்கிய காட்டு யானை தும்பிக்கையை மட்டும் உயர்த்தியவாறு, நம்பிக்கையுடன் வெள்ளம் போன போக்கில் சென்றது. பின்னர் பல கட்டமாக போராடி காட்டு யானை ஆற்றை கடந்து கரையோரம் வந்தது.

அப்போது மற்ற காட்டு யானைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட யானையை எதிர்பார்த்து ஆற்றின் கரையோரம் நின்று கொண்டிருந்தன. தொடர்ந்து அவை கரையேறிய காட்டு யானையுடன் வனப்பகுதிக்குள் சென்றன. இந்த காட்சியை ஆற்றின் கரையோரம் இருந்த சில வாலிபர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். காட்டு யானை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் தப்பிய நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்