ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1 கோடி இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|ஆன்லைன் டிரேடிங்கில் வினோத் சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
சென்னை,
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வந்த வினோத், அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆன்லைன் டிரேடிங் செய்துள்ளார்.
இதற்காக உறவினர் நண்பர்களிடமிருந்து கடன் பெற்று சுமார் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து கடன் பிரச்சினையில் வினோத் சிக்கி உள்ளார். இதனையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்று கடனை அடைத்தாலும் ஒரு சிலருக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதனால் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்த வினோத் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.