காதல் விவகாரத்தில் தலை துண்டித்து வாலிபர் படுகொலை
|அழகேந்திரன் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள முட்புதருக்குள் வாலிபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உடலும் தனித்தனியாக கிடந்தன. நிர்வாண நிலையில் அந்த ஆண் பிணம் கிடந்தது.
இதை அந்த பகுதியில் சென்றவர்கள் கவனித்து, கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிவித்தனர். பின்னர் போலீசாருக்கும் இதுபற்றி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடலையும், தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த வாலிபர் யார்? என்பதை அறிய தீவிர விசாரணையை போலீசார் தொடங்கினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய், வரவழைக்கப்பட்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த், சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இதுதொடர்பாக வி.சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சற்று நேரத்தில் இந்த சம்பவத்தில் துப்பு துலங்கியது. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகன் அழகேந்திரன் (வயது 21) என்று தெரியவந்தது. பட்டதாரியான இவர், வேலை தேடி வந்துள்ளார்.
கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் கூறியதாவது:-
அழகேந்திரன் வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது அந்த பெண்ணின் உறவினரான டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த போராளி என்ற பிரபாகரன் (27) என்பவருக்கு தெரியவந்தது. அவர் அழகேந்திரனை கண்டித்து உள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அழகேந்திரனிடம் தனியாக பேச வேண்டும் என வெங்கடாசலபுரம் பகுதிக்கு பிரபாகரன் அழைத்து சென்றுள்ளார். அங்கு பிரபாகரனுக்கும் அழகேந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், தான் மறைத்து வைத்திருந்த நீண்ட வாளால் அழகேந்திரனின் தலையை துண்டித்து ெகாடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தலையையும், உடலையும் வேறு வேறாக அங்குள்ள புதரில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். .
இதற்கிடையில் தனது மகனை ஆணவக்கொலை செய்து விட்டதாக கூறி அழகேந்திரனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் தமிழ்புலிகள் அமைப்பினர் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கலெக்டரை நேரில் சந்தித்து தங்கள் மனுவை அளிக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே தலைமறைவாக இருந்த பிரபாகரனை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.