பெண்ணின் தலையில் விழுந்து வெடித்து சிதறிய பட்டாசு..
|வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 48 வயது பெண்ணின் தலை மீது பட்டாசு விழுந்து வெடித்து சிதறியது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் ஒரு கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் வாண வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இந்த திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் அந்த ஊரை சேர்ந்த 48 வயது பெண்ணும் திருவிழாவை காண வந்திருந்தார்.
அப்போது வாண வேடிக்கையில் வானத்தை நோக்கி விடப்பட்ட ஒரு பட்டாசு திடீரென அருகில் உள்ள மரத்தின் மீது பாய்ந்தது. பின்னர், அந்த பட்டாசு மரத்தின் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த 48 வயது பெண்ணின் தலை மீது விழுந்து வெடித்து சிதறியது. இதைக்கண்டு அருகில் நின்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் அந்த பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு நின்றவர்கள் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அஞ்சுகிராமம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.