நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கி இழுத்துச்சென்ற எருமை மாடு... சென்னையில் பரபரப்பு
|கொம்பில் சிக்கிய பெண்ணை சாலையில் இழுத்தபடி சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு எருமை மாடு ஓடியது.
சென்னை,
சென்னை திருவொற்றியூர், கிராமத்தெரு அம்சாத்தோட்டம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வினோத். லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மதுமதி, திருவொற்றியூர் கிராமத்தெரு சோமசுந்தரம் நகர் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வழியாக தறிகெட்டு ஓடி வந்த எருமை மாடு, மதுமதியை தனது கொம்பால் முட்டி தூக்கி, ஒரு சுழற்று சுழற்றியது.
அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், எருமை மாட்டை விரட்டினர். அப்போது மதுமதி அணிந்திருந்த ஆடை எருமை மாட்டின் கொம்பில் சிக்கியதால் அவரை சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு சாலையில் இழுத்தபடி எருமை மாடு அங்கிருந்து ஓடியது. பின்னர் ஒருவழியாக எருமை மாட்டின் கொம்பில் சிக்கிய மதுமதியை பத்திரமாக மீட்டனர். இதில் மதுமதியின் காலில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் அவரது கை, கால் மற்றும் உடலின் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.
ரத்தக்காயத்துடன் இருந்த அவரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எருமை மாட்டிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற முயன்ற அப்பகுதியில் இஸ்திரி கடை வைத்திருக்கும் சந்திரசேகர் உள்பட மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
அதன்பிறகும் அடங்காத எருமை மாடு, பொதுமக்கள் விரட்டியதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களை மோதி தள்ளியது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மாடு மோதி தள்ளியதில் மோட்டார்சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எருமை மாட்டை பிடித்து பெரம்பூரில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை எருமை மாடு முட்டி தூக்கி, சாலையில் தர, தரவென இழுத்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பிடிபட்ட எருமை மாட்டுக்கு யாரும் உரிமை கோரி வரவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எருமை மாட்டை நாய் கடித்ததால் அது வெறி கொண்டு ஓடி சாலையில் சென்றவர்களை முட்டியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே எருமை மாட்டை நாய் கடித்ததா? எனவும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுமதியின் கணவர் வினோத் கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.