< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தல்
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தல்

தினத்தந்தி
|
8 July 2024 9:59 PM IST

செங்கல்பட்டில் பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவன், சிறுமி காரில் கடத்தப்பட்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது 31). ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி ஆர்த்தி (30) என்கிற மனைவியும், ரக்சதா (11) என்கிற மகளும், நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஆர்த்தி பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரக்சதா செங்கல்பட்டு ஒழலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும், நித்தின் 2-ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ரட்சிதா மற்றும் நித்தின் ஆகிய அக்காள், தம்பி இருவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில், மதியம் உணவு இடைவேளையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளிக்குள் புகுந்து காரில் 2 பேரையும் கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி சார்பில் தெரிவித்த தகவல் அடிப்படையில், விரைந்து சென்ற வேலன் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், வாகன சோதனையில் ஈடுபட்டும் போலீசார் மர்மகும்பலை வலைவீசி தேடி விசாரித்து வருகின்றனர். பள்ளிக்குள் புகுந்து அக்காள், தம்பியை மர்மகும்பல் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்