< Back
மாநில செய்திகள்
சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது இளம்பெண்
மாநில செய்திகள்

சென்னையில் பரபரப்பு சம்பவம்: ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண்

தினத்தந்தி
|
16 July 2024 5:58 AM IST

15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண், வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, சிறுவனை அவனது பெற்றோர் மீட்டனர்.

விருகம்பாக்கம்,

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது பெண் ஒருவர், அங்குள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவன் ஒருவனும் வேலை பார்த்து வந்தான். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நெருங்கி பழகினர்.

வயது வித்தியாசம் அதிகம் இருந்ததாலும், சிறுவன் அந்த பெண்ணை அக்காள் என்று அழைத்ததாலும் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

இதற்கிடையில் பெண்ணுக்கு சிறுவன் மீது காதல் மலர்ந்தது. ஆசை வார்த்தை கூறி சிறுவனை தனது காதல் வலையில் வீழ்த்தினார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று இருவரும் உல்லாசமாக சுற்றி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெண்ணும், சிறுவனும் நெருக்கமாக பழகுவது அவர்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி சிறுவனின் பெற்றோரிடம் கூறினர். அவர்கள், மகனை கண்டித்தனர். அப்போது சிறுவன், அந்த பெண் தனக்கு அக்காள் போன்றவர் என்று கூறிவிட்டான்.

ஆனாலும் சந்தேகம் அடைந்த பெற்றோர், மகனை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது பெண்ணும், சிறுவனும் காதல் வலையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. தங்கள் காதல் விவகாரம் அரசல் புரசலாக மற்றவர்களுக்கு தெரியவந்ததால் பெண், சிறுவனை அழைத்துக்கொண்டு வெளியூர் தப்பிச்செல்ல முடிவு செய்தார்.

அதன்படி பெண், சிறுவனுடன் வௌியூர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கிளாம்பாக்கம் சென்று, மகனை மீட்டனர். சிறுவனின் பெற்றோரை கண்டதும், பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்