17 வயது சிறுமியை காஷ்மீருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த காதலன்
|கடந்த 13-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.
கோவை,
கோவையை அடுத்த பேரூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ந் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை, அவர் முன்பு வேலை பார்த்த துணிக்கடை உரிமையாளரின் மகனான முகமது அயாஸ் (வயது 23) என்பவர் காதலித்ததும், அவர்கள் 2 பேரும் மாயமானதும் தெரியவந்தது.
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பேரூர் போலீஸ் சூப்பிரண்டு முரளி (பொறுப்பு) ஆலோசனையின் பேரில், பேரூர் இன்ஸ்பெக்டர் முருகன் மேற்பார்வையில், பேரூர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், போலீசார் கண்ணதாசன், சாந்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 10 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே சிறுமியை முகமது அயாஸ் காஷ்மீருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே பேரூர் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் காஷ்மீர் சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி மற்றும் முகமதுஅயாஸ் ஆகியோரை விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அந்த வழக்கு பேரூர் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில், சிறுமியை காதலிப்பதாக கூறி முகமது அயாஸ் பழகியதும், பின்னர், திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இது குறித்து பேரூர் மகளிர் இன்ஸ்பெக்டர் அமுதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அயாசை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.