< Back
மாநில செய்திகள்
தலைமை ஆசிரியர் நடவடிக்கை
மாநில செய்திகள்

வாணியம்பாடி: வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடை நீக்கம் - தலைமை ஆசிரியர் நடவடிக்கை

தினத்தந்தி
|
17 July 2024 11:44 PM GMT

கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் போதைப்பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நகரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிக அளவில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சிகள் தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.கடந்த வாரம் வாணியம்பாடியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே, அவர்கள் வைத்திருந்த பையை ஆசிரியர் சோதனையிட்டார். அப்போது சிறிய வெள்ளை நிற பையில் கஞ்சா மாதிரியான பொருள் இருந்தது. அதை ஆசிரியர் கைப்பற்றினார். மேலும் அதை வகுப்பறையில் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் ஒரு வாரம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இடைநீக்கம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தேவனிடம் கேட்டபோது ''மாணவர்கள் பயன்படுத்தியது ஒருவகையான புகையிலைப் பொருள். அவர்களிடமிருந்து அதை கைப்பற்றியது உண்மைதான். இது சம்பந்தமாக 7 மாணவர்கள் ஒரு வாரம் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'' என தெரிவித்தார். இது தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்