ரவுடி கொடூர கொலை: அடையாறு ஆற்றில் உடல் வீசப்பட்ட சம்பவம் - நண்பர்கள் உள்பட 5 பேர் கைது
|ரவுடியை கொடூரமாக கொலை செய்து, அடையாற்றில் அவரது உடல் வீசப்பட்டது. கொலையாளிகள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் நேற்று வாலிபர் பிணம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர்புரம் போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். அப்போது அந்த வாலிபரின் முகம் மற்றும் கழுத்து உள்ளிட்ட 7 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்ததையடுத்து மர்மநபர்கள் இவரை கொடூரமாக கொலை செய்து அடையாறு ஆற்றில் வீசி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கண்ணகிநகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் (வயது 27) என்பது தெரியவந்தது.
இவர் கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக இருந்துள்ளார். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ ஆகாஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அடையாறு ஆற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்திருந்தனர். ஆகாஷை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ரவுடியை கொடூரமாக கொலை செய்து, அடையாற்றில் அவரது உடல் வீசப்பட்ட சம்பவத்தில், அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரக்கு வாங்கி கொடுத்து நண்பனே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
கடந்த வருடம் அருண் என்பவரின் நண்பனை வெட்டி கொன்ற வழக்கில் ஆகாஷ் ஜாமின் பெற்றுள்ளார். ஆகாஷை கொல்ல பலமுறை முயன்றும் முடியாத விரக்தியில் இருந்த அருண், ஆகாஷின் நண்பர்களின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து ஆகாஷிற்கு அதிக அளவு சரக்கை ஊற்றி கொடுத்து வெட்டி கொன்று சடலத்தை ஆற்றில் அருண் நண்பர்கள் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.