5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பழம்பெரும் திருக்கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தரும் வகையில் தமிழ்நாட்டின் நகரங்களை, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையிலான இரயில் சேவைகளும், தேசிய, மாநில நெடுஞ்சாலை இணைப்பு வசதிகளும் அதிக அளவில் கொண்ட மாநிலமாகவும், பேருந்து உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கின்றது.
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி. மிதவை அமைப்பு ( AIR SUSPENSION) வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜிபிஎஸ் கருவி, வைபை வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் டாக்டர் க. மணிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.