கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
|கள்ளச்சாராயம் குடித்த 80-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக தொிகிறது. இங்கு நடைபெறும் சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் அதிகாாிகளுக்கும் தகவல் தொிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சாராயம் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வந்ததாக தொிகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை அருந்தியதாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்த 6 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் முதற்கட்டமாக கணேசன் மகன் பிரவீன்(29), தர்மன் மகன் சுரேஷ் (46), சேகர், ஜெகதீசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் கிராமத்தில் சாராயம் குடித்த 80-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சாிந்து விழுந்தனா். இவா்களையும் அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.