< Back
மாநில செய்திகள்
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
6 Oct 2024 8:08 PM IST

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே, இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

அதேவேளை, போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.

குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். கடுமையான வெயிலாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். கடுமையான வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த ஜான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

அதேபோல், விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற திருவெற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

மயக்கமடைந்த கார்த்திகேயன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஆம்புலன்சிலேயே கார்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெருங்குளத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மேலும் இருவர் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் 93 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5பேர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்