விஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள்: விமானப்படை நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? - தமிழிசை கேள்வி
|மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதல்-அமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன என்று தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்... நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்?
நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்த பா.ஜ.க.வின் மாநாடு, அதேபோல் ஆண்டாண்டு நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு... நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்?
கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதல்-அமைச்சர் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.