< Back
மாநில செய்திகள்
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முதல்-அமைச்சர் - புஸ்ஸி ஆனந்த்
மாநில செய்திகள்

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முதல்-அமைச்சர் - புஸ்ஸி ஆனந்த்

தினத்தந்தி
|
27 Sept 2024 3:09 AM IST

எந்த தடை வந்தாலும் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்தே தீரும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை,

அக்டோபர் 27 ம் தேதி தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிகள் தொடர்பாக விவாதிப்பதற்காக சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் மாவட்ட வாரியாக எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும்? போலீசார் விதித்துள்ள நிபந்தனைகளை கடைபிடித்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட, வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு குழு நிர்வாகிகள் பொறுப்பேற்று தொண்டர்களை வழி நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒரு வாரத்தில் மாநாட்டில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறித்து கட்சி தலைமைக்கு தெரிவிக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், 'மாநாடு பணிகள் தொடர்பாக கட்சி தலைமையில் இருந்து அவ்வப்போது உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி உங்கள் பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.

மழை, புயல், தடை எது வந்தாலும் மாநாடு திட்டமிட்டபடி நடக்கும். மாநாட்டுக்கு முன்பாக கட்சி பதவிகள் அறிவிக்கப்படும். பதவிக்காக என்னை தொடர்பு கொள்ள வேண்டாம். யாருக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார். மாநாட்டில் கட்சி கரை வேட்டி அணிந்து வர வேண்டும்.

மாநாட்டில் பெண்கள் அதிகமாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 2026 தான். 2026-ல் த.வெ.க தலைவர் விஜய் தான் முதல்-அமைச்சர்" என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், 2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராக விஜய் வருவதற்கு உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்