சென்னை
மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
|தமிழகத்தில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வடகிழக்குப் பருவமழையினால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பல பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தினால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமலும், வீடுகளுக்கு திரும்ப முடியாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள். சாலைகளில் நிரம்பி நிற்கும் மழைநீரால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகி, ஒருநாள் மழையைக் கூட தாங்க முடியாமல் சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.பருவமழை தொடரும் என்றும், பல மாவட்டங்களில் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த நிலையில், நிர்வாகத்தின் ஆணிவேராக திகழும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு காலியாக இருக்கிறது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் துயரங்களை நேரடியாக பார்வையிட்டு தீர்வுகாண வேண்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவிகளில் ஏறக்குறைய 76–க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன என்ற செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. அதைவிட மிக மோசமான சூழல் என்னவென்றால், தற்போது பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலின்படி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதல்வரிசையில் உள்ள 10 பேரில், 6 பேர் மத்திய அரசு பணிக்கு சென்று விட்டார்கள். இவர்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் மொத்தமுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இதுவரை 35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியின் கமிஷன் கலாச்சாரத்திற்கும், அமைச்சர்கள் கைநீட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பமிட வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்க முடியாத அதிகாரிகளும், ''தமிழகத்தில் பணியாற்ற முடியாது'' என்று கருதி, இத்தனை பேர் மத்திய அரசு பணிக்கு சென்றிருப்பது தமிழக அரசின் நிர்வாகத் தோல்விக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது.
எஞ்சியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் திறமையான பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 'டம்மி போஸ்டிங்' கொடுத்து, அவர்களின் திறமையை தமிழக மக்களுக்காக பயன்படுத்தாமல் அமைச்சர்களும், முதல்–அமைச்சரும் வீணடிக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. அரசு நிர்வாகத்தின் சீர்குலைவு என்பது முதல்–அமைச்சரின் அலுவலகத்தில் இருந்தே துவங்குகிறது. ஏனென்றால், முதல்–அமைச்சர் அலுவலகத்திலேயே இரு செயலாளர்கள் பதவிகள் காலியாக உள்ளன.திட்டக்குழுவில் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு பதவி காலியாக உள்ளது. அந்தப் பணியிடத்தில், அந்தத் துறைக்கு சம்பந்தமில்லாத வேறு ஒருவர் கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒருசில துறைகளில் 5 வருடங்களுக்கும் மேலாக ஒரே செயலாளர் அனுமதிக்கப்படுகிறார்.
இப்படி ஆட்சி பணி நிர்வாகத்தில் உள்ள திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பந்தாடப்படுவதற்கு தலைமைச் செயலாளரே துணை போகிறார் என்பது மிகவும் வேதனையளிப்பதாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த அ.தி.மு.க. அமைச்சரவையும் செயலிழந்து கிடக்கின்ற இந்த நேரத்தில், துறையின் செயலாளர்கள், தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் போன்ற பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதுதான் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், அந்த நிர்வாக அமைப்பையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இன்று சிதைத்து விட்டது கவலையளிக்கிறது.ஊழல் அமைச்சர்களின் சட்டவிரோதமான கட்டளைகளுக்கு எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிந்து, பணியாற்றுவதை தவிர்த்து, மாநில நலனுக்காக துணிச்சலுடனும், நேர்மையுடனும் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள் என்பதை மாவட்ட கலெக்டர்களாகவும், துறைகளின் செயலாளர்களாகவும், ஏன் தலைமைச் செயலாளராகவும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறைந்தபட்சம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால், இப்போது ஒரே நாள் மழைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளிதில் தடுத்திருக்க முடியும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.ஆகவே, அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆளுங்கட்சி என்பதையும் மறந்துவிட்டு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்தில் ஒரு பகுதி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
'நிர்வாக பேரிடர்' ஏற்பட்டு தமிழக அரசு பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ள இந்தநேரத்தில், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாநிலத்திற்கு திரும்பி, மக்கள் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி, பொறுப்பான எதிர்கட்சி என்றமுறையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை தி.மு.க. வழங்கும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.