தமிழக அமைச்சரவையில் புதிதாக 2 இளம் அமைச்சர்கள்?
|மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்-அமைச்சரிடம், தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா..? உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.
இதனிடையே தமிழக அமைச்சரவை மாற்றத்தின்போது 2 புதிய இளம் அமைச்சர்களை சேர்க்க வேண்டும் என்பதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், அதற்காக முதல்-அமைச்சரை அவர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மூத்த அமைச்சர்கள் 2 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
துணை முதல்-அமைச்சர் பதவிக்கு அமைச்சர் உதயநிதி முன்னேற உள்ளார். அது பற்றிய தகவல்கள் வரும் அக்டோபர் 5-ந் தேதிக்கு மேல் வெளியாகலாம் என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.