தமிழகத்தில் மேலும் 2 'வந்தே பாரத்' ரெயில்கள்: 31-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
|தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
சென்னை,
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரெயில் சேவை மற்றும் பெங்களூரு - மதுரை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வரும் 31-ந் தேதி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னைக்கு பிரதமர் மோடி வருவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை. அதேநேரத்தில், சென்னை சென்டிரலில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட உள்ளது. என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பது தொடர்பான விவரம் இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 5 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
புதிய வந்தே பாரத் ரெயில் அட்டவணை
எழும்பூர் - நாகர்கோவில் (20627- 20628) இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர் காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வந்தே பாரத் ரெயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆக ஒரேநாளில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூரு (20671-20672) வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரெயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் 8 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.