ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து வாலிபர் பலி
|நிரவி விழிதியூர் மெயின் சாலையில் வேகத்தடையை கவனிக்காமல் ஸ்கூட்டரில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்து வாலிபர் பலியானார்.
நிரவி
நிரவி விழிதியூர் மெயின் சாலையில் வேகத்தடையை கவனிக்காமல் ஸ்கூட்டரில் வேகமாக சென்றபோது தடுமாறி விழுந்து வாலிபர் பலியானார்.
மனைவியை பார்க்க வந்தார்
திருவாரூர் மாவட்டம் குடவாசல், அரசவனங்காடு கீழத்தெருவில் வசித்து வந்தவர் அறிவழகன் (வயது38). இவருக்கும், காரைக்காலை அடுத்த நிரவி ஊழியபத்து காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த சத்தியவாணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில், கடந்த 1-ந் தேதி, அறிவழகன் காரைக்காலில் உள்ள சத்தியவாணியை பார்த்துவிட்டு ஸ்கூட்டரில் மீண்டும் திருவாரூர் சென்றுள்ளார். நிரவி, விழிதியூர் மெயின் சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றதாக தெரிகிறது.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலை, மற்றும் உடல் பகுதிகளில் படுகாயமடைந்தார். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விழிதியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பரிதாப சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அறிவழகன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அவரை கொண்டுசென்றனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அறிவழகன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.