நாற்று நடும் பணியில் வடமாநில இளைஞர்கள்
|திருநள்ளாறு பகுதியில் நாற்றுநடும் பணியில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருநள்ளாறு
காரைக்கால் மாவட்டம் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. காவிரியின் கடைமடை பகுதியான இங்கு காவிரி தண்ணீர் கிடைக்காத நிலையில், வடகிழக்கு பருவமழையை நம்பி தற்போது 4,500 ஹெக்டர் சம்பா, தலடி நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.
வடமாநில இளைஞர்கள்
இந்தநிலையில் திருநள்ளாறு அடுத்த தென்னங்குடி பகுதி விவசாயிகள் வடமாநில இஞைர்களை வைத்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாற்று நடுவது குறித்து அவர்களுக்கு சரியாக தெரியாத நிலையிலும், வயலில் இறங்கி ஒவ்வொரு நாற்றுகளாக பிரித்து நடுகின்றனர். அப்போது அவர்கள் இந்தி பாடலை பாடியபடி பணியில் ஈடுபடுகின்றனர். இதனை உள்ளூர் மக்கள் வியப்பாக பார்த்து சென்றனர்.இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நாற்று நட உள்ளூர் ஆட்கள் ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம் வரை கேட்கின்றனர். ஆனால் வடமாநில இளைஞர்களை கொண்டு நடவு செய்வதால் ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் மட்டுமே செலவாகிறது என்றார்.