144 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
|புதுவை அரசு தொடக்கப்பள்ளிகளில் 145 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளது. இதனை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக விதிமுறைகளும் உருவாக்கப்பட்டது.
இந்தநிலையில் முதற்கட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கோப்புகள் தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.
145 ஆசிரியர் பணியிடம்
இந்தநிலையில் புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காரைக்கால் மற்றும் மாகியில் காலியாக உள்ள 145 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி காரைக்காலில் 124 இடங்களும் (வகுப்பு வாரியாக பொது-52, ஓ.பி.சி.-13, எம்.பி.சி.-22, இ.பி.சி.-2, பி.சி.எம்.-2, பி.டி.-1, எஸ்.சி.-19, எஸ்.டி.-1, இ.டபிள்யு.எஸ்.-12, பி.டபிள்யு.பி.டி.-4), மாகியில் 21 இடங்களும் (பொது-11, ஓ.பி.சி.-2, எம்.பி.சி.-3, எஸ்.சி.-3, இ.டபிள்யு.எஸ்.-2) நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பில் தளர்வு
ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 32 வயது இருக்கவேண்டும். இதில் ஓ.பி.சி., எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., பி.டி. ஆகிய பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வகுப்புகள் வாரியாக 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள் ஆகியோருக்கும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு 0413-2207320 என்ற எண்ணுக்கு அலுவலக வேலை நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார்.