களமேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
|புதுவையில் கள மேற்பார்வையாளர், அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இதை 46.78 சதவீதம் பேர் எழுதினர்.
புதுச்சேரி
கள மேற்பார்வையாளர்
புதுவை பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குனரகத்தில் 27 கள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் நடந்தது.
இதற்காக 2 ஆயிரத்து 773 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு புதுவையில் 7 மையங்களில் நடந்தது. இதற்காக காலை 9 மணி முதல் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். அவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
46.78 சதவீதம்
தேர்வர்கள் கைப்பைகள், செல்போன், புளூடூத் சாதனங்கள், ஹெட் போன், கால்குலேட்டர், பென் டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.
காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதில் 1,299 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இது 46.78 சதவீதம் ஆகும். 1,478 பேர் தேர்வு எழுதவில்லை.
அமலாக்க உதவியாளர்
இதேபோல புதுவை போக்குவரத்துத் துறையில் 30 அமலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடந்தது. இதற்காக 580 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்ததேர்வு 2 மையங்களில் நடந்தது. தேர்வர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 296 பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இது 51.03 சதவீதம் ஆகும். 284 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த தேர்வுக்கான விடைகள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.