2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
|மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
புதுச்சேரி
மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.
பிளாஸ்டிக் நிறுவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சுள்ளங்குடியை சேர்ந்தவர் செழியன் (வயது52). இவரது தம்பி முத்துக்குமார். இவர் புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு தினக்கூலி ஊழியர்களாக சிலர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தில் 2-வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து முத்துக்குமார் நிறுவனத்தில் செழியனும் ஒரு தொழிலாளிபோல வேலை செய்து வந்தார்.
சிகிச்சை பலனின்றி சாவு
இந்த நிலையில் நேற்று செழியன் வேலையை முடித்துவிட்டு இரவு 2-வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தடுப்பு சுவரில் அமர்ந்தபோது சுவர் இடிந்து தவறி அவர் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்த சக தொழிலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.