பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் முயற்சி
|திருபுவனை அருகே அதிகாரியை கண்டித்து பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
திருபுவனை
திருபுவனை தொகுதி சோரப்பட்டு அருகே விநாயகம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு கடந்த 4 ஆண்டுகளாக 100 நாள் திட்டத்தில் சரியாக வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தும், பணிகள் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் வேலை வழங்காத வட்டார வளர்ச்சி அதிகாரியை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை விநாயகம்பட்டு கிராமத்தில் உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 13-ந் தேதி பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலக பணி ஆய்வாளர் தேசிங்கு என்பவர், விநாயகம்பட்டு கிராமத்துக்கு விரைவில் பணி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இன்னும் வேலை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் இன்று காலை விநாயம்பட்டு மெயின் ரோட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் தட்ணாமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் திரண்டனர். தகவல அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலக முதுநிலை பொறியாளர் செங்கதிரவன் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விநாயகம்பட்டு ஏரியில் வருகிற 31-ந் தேதி வேலை தொடங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.