குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து பிச்சை எடுக்கும் பெண்கள்
|காரைக்காலில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து பிச்சை எடுக்கும் பெண்கள் 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டுச்சேரி
காரைக்காலில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து பிச்சை எடுக்கும் பெண்கள் 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிச்சையெடுக்கும் பெண்கள்
காரைக்கால் நகரப் பகுதிகளில் சமீப காலமாக கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஓட்டல்கள், பேக்கரி, வணிக நிறுவனங்கள், முக்கிய சிக்னல்களில் கைக்குழந்தைகளுடன் கையேந்தி பிச்சை எடுப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகின்றன.
பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுப்பதை கண்டு சிலர் மனம் இரங்கி தங்களால் இயன்ற உதவியை செய்கின்றனர். குழந்தைகளை கடும் வெயில் என்று பாராமல் தூக்கிக்கொண்டு அலையும் இப்பெண்கள் சில நேரங்களில் வரம்பு மீறவும் செய்கின்றனர். காசு தாரதவர்களை தங்களின் பாசையில் வசை பாடுகின்றனர்.
திடுக்கிடும் தகவல்
இதுகுறித்து காரைக்கால் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் காரைக்கால் நகர போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் பெண் போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் கைக்குழந்தையுடன் பிச்சையெடுத்த 20-க்கும் மேற்பட்ட பெண்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
வாடகைக்கு வாங்கி...
இந்த பெண்கள் தஞ்சை, மன்னார்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்து பிச்சை எடுத்தது தெரியவந்தது. இதற்காக குழந்தையின் பெற்றோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பிச்சை எடுக்கும் கும்பலிடம் மயக்க நிலையில் இருந்த குழந்தைகளை மீட்ட போலீசார் முதலுதவி சிகிச்சை அளித்து பால், பிஸ்கெட் கொடுத்தனர். குழந்தைகளை யாரிடம் வாடகைக்கு வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.