கலவை எந்திர சக்கரத்தில் சிக்கி பெண் பலி
|டிராக்டரில் சென்றபோது தவறி விழுந்ததில் கலவை எந்திர சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்துபோனார்.
கோட்டுச்சேரி
டிராக்டரில் சென்றபோது தவறி விழுந்ததில் கலவை எந்திர சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்துபோனார்.
கட்டிட தொழிலாளி
கோட்டுச்சேரி கீழகாசாக்குடி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 42). சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். நேற்று ராயன்பாளையத்தில் நடந்த கட்டுமான பணியில் ஈடுபட்டார்.
அங்கிருந்து கீழகாசாக்குடிக்கு முல்லை நகரை சேர்ந்த செல்வகணேஷ் (37) என்பவர் சிமெண்டு கலவை எந்திரத்தை டிராக்டரில் இணைத்து ஓட்டிச்சென்றார். கீழகாசாக்குடியில் இறக்கி விடும்படி கூறி சாந்தி டிராக்டரில் ஏறி பயணம் செய்தார்.
டிரைவர் கைது
வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொல்லி பூ வாங்கி கொண்டு, மீண்டும் ஏறிய போது டிராக்டர் நகர்ந்ததால் எதிர்பாராத விதமாக சாந்தி தவறி கீழே விழுந்தார். அப்போது கலவை எந்திரத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜாக்கிரதையாக டிராக்டர் ஓட்டிய செல்வகணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.