< Back
புதுச்சேரி
நகை கடையில் மோதிரம் திருடிய பெண் கைது
புதுச்சேரி

நகை கடையில் மோதிரம் திருடிய பெண் கைது

தினத்தந்தி
|
25 July 2023 10:18 PM IST

காரைக்கால் அருகே பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகைக்கடையில் மோதிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகைக்கடையில் மோதிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மோதிரம் மாயம்

காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்த நகைகளை கடை உரிமையாளர் சரிபார்த்தார். அப்போது 4 கிராம் தங்க மோதிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை உரிமையாளர் ஆய்வு செய்தார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு கடையில் இருந்த ஊழியரான சித்ரா பல மாடல்களில் தங்க மோதிரங்களை காட்டியுள்ளார். அப்போது சித்ராவின் கவனத்தை திசை திருப்பி 4 கிராம் மோதிரத்தை அந்த பெண் கைக்குட்டையில் மறைத்து, திருடிச்சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

பெண் கைது

இந்த ஆதாரத்தை வைத்து காரைக்கால் நகர போலீசில் சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிச்சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோதிரத்தை திருடிச்சென்ற பெண் திருவாரூர் அய்யம்பேட்டையை சேர்ந்த தனலட்சுமி (வயது45) என்பதும், அவருடன் வந்தது அதே பகுதியை சேர்ந்த குபேரன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் திருவாரூர் சென்று தனலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க மோதிரம் மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள குபேரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் இதேபோல் பல நகைக்கடைகளில் நகை வாங்குவது போல் நடித்து தனலட்சுமி கைவரிசை காட்டி இருப்பதும் இதுதொடர்பாக அவர் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்