ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது
|வில்லியனூர் அருகே ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே ரவுடியை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பலம் சாலை நத்தமேடு பகுதியில் உள்ள ஏரிக்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடிக்க முயன்றனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள், 1 இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரவுடியை கொல்ல...
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விநாயகம் என்ற விநாயகமூர்த்தி (வயது 33), வாஞ்சிநாதன் (34), அருணாச்சலம் (27), அகரம் பகுதியை சேர்ந்த ராம்குமார் (23), விழுப்புரம் மாவட்டம் நெல்லப்பரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
ரவுடியான விநாயகம் கோஷ்டிக்கும், தாடி அய்யனார் கோஷ்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தாடி அய்யனார் கோஷ்டியை சேர்ந்த ரவுடியான கொத்துக்காய் ஏழுமலை உள்ளிட்ட சிலர் விநாயகம் கோஷ்டியை சேர்ந்த சேது என்பவரை வெட்டி கொல்ல செய்ய முயற்சி செய்தனர்.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொத்துக்காய் ஏழுமலை தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். எனவே அவரை கொலை செய்ய விநாயகம் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விநாயகம் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, இரும்பு கம்பி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.