10 சதவீத இடஒதுக்கீட்டால் டாக்டர் கனவு நனவானது
|புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர்ந்து படிக்க இதுவரை 20 மாணவ, மாணவிகள் தகுதி பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மருத்துவம் தொடர்பான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறிய கருத்து வருமாறு:-
டாக்டர் கனவு நனவானது
மாகி அரசு பள்ளி மாணவி
சிஸ்தா:
எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பது எனது கனவு. இதற்காக நான் கடினமாக உழைத்து வந்தேன். நீட் தேர்வில் 449 மதிப்பெண்கள் பெற்றேன். இருந்தாலும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்ற கவலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் எனக்கு இடம் கிடைத்தது. தற்போது எனது டாக்டர் கனவு நனவாகி இருக்கிறது. இதற்காக பாரத பிரமருக்கும், புதுவை கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசு வழங்கிய இந்த வாய்ப்பு மூலம் நான் நன்றாக படித்த மருத்துவ துறையில் சாதனைகள் படைப்பேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அன்னை சிவகாமி
அரசு பள்ளி மாணவி தரணிஷா:
புதுச்சேரி அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க முடியும் என்ற கனவு நினைவாகி உள்ளது. எனதுதந்தை கூலித்தொழில் செய்து வந்தார். எனவே என்னால் நீட் பயிற்சிக்கு சென்று படிக்க முடியவில்லை. அரசு பயிற்சி மையத்தில் தான் படித்தேன். தற்போது எனக்கு பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வரும் காலத்தில் எம்.பி.பி.எஸ். முடித்து முதுநிலை மருத்துவம் படித்து ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வேன்.
அரசே கல்வி கட்டணம் ஏற்றது
வ.உ.சி. அரசு பள்ளி மாணவர்
சுரேந்திரன்:
10 சதவீ இடஒதுக்கீட்டின் படி, இடம் கிடைத்து மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு அரசே கட்டணத்தையும் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது ஏழை எளிய மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகும். எனவே இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளது. நல்ல முறையில் படித்து சாதனை படைப்பேன்.
கலைஞர் கருணாநிதி அரசு பள்ளி மாணவி பிரியசகி:
எனக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் கட்டணம் செலுத்த முடியாது நிலை இருந்தது. இந்த நிலையில் அரசே அந்த கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் நிறைய மாணவர்கள் சேருவார்கள். மாணவர்கள் தினந்தோறும் பள்ளியில் நடத்திய பாடங்களை அன்றே படித்தால் போதும். நீட் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.