குபேர் திருமண மண்டபம் சீரமைக்கப்படுமா?
|புதுச்சேரி நகராட்சி குபேர் திருமண மண்டபத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி நகராட்சி குபேர் திருமண மண்டபத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
பராமரிப்பு இல்லை
புதுவை சுப்பையா சாலையில் நகராட்சிக்கு சொந்தமான குபேர் திருமண மண்டபம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிடம் புனரமைப்பு பணிக்காக அங்கு செயல்பட்டு வந்த நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலகம் குபேர் திருமண மண்படத்திற்கு மாற்றப்பட்டன.
பொதுமக்கள் குறைந்த செலவில் சுப நிகழ்ச்சிக்களை நடத்துவதற்காக கட்டப்பட்ட திருமண மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த திருமண மண்டபம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடம் பலவீனமானது. அதையடுத்து அங்கு செயல்பட்டு வந்த அரசு அலுவலகம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் எந்த பராமரிப்பும் இன்றி மூடிக்கிடக்கிறது.
எதிர்ப்பார்ப்பு
இதனால் ஏழை, எளிய மக்கள் அதிக செலவில் தனியார் மண்டபத்தை வாடகைக்கு எடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த மண்டபத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இது குறித்து நகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, 'குபேர் திருமண மண்டபத்தை சீரமைக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக கோப்புகள் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.