< Back
புதுச்சேரி
சோரியாங்குப்பத்தில் பாலம் கட்டப்படாதது ஏன்?
புதுச்சேரி

சோரியாங்குப்பத்தில் பாலம் கட்டப்படாதது ஏன்?

தினத்தந்தி
|
17 Aug 2023 10:06 PM IST

சோரியாங்குப்பத்தில் பாலம் கட்டப்படாதது ஏன்? என்பதற்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரி

சோரியாங்குப்பத்தில் பாலம் கட்டப்படாதது ஏன்? என்பதற்கு பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு

புதுவை குருவிநத்தம் சோரியாங்குப்பம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று கூட்டப்பட்ட கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாலம் கட்டாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புத்துணியை வாயில் கட்டி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவம் பாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுப்பணித்துறை விளக்கம்

இந்தநிலையில் பாலம் கட்டப்படாததற்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாகூர் அடுத்த குருவிநத்தம் சோரியாங்குப்பம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் பாலம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் உள்ள சிரமத்தை அரசு கவனத்தில் கொண்டு மேற்கண்ட பணிக்கான ரூ.1 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்தில் நீர்ப்பாசன கோட்டம் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

ஒப்பந்தப்புள்ளி

இதன் தொடர்ச்சியாக முதல் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் யாரும் பங்கேற்கவில்லை. 2-வது முறை ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அவை அரசு நிர்வாக காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது.

எனவே 3-வது முறையாக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டதும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்