தேர்வர்கள் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை?
|இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வுக்கு மையங்களுக்கு தேர்வர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி
இளநிலை எழுத்தர் பணிக்கான தேர்வுக்கு மையங்களுக்கு தேர்வர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை எழுத்தர் பணி
புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 165 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.) மற்றும் 55 பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. 46 ஆயிரத்து 904 பேர் (புதுச்சேரி (37,329), காரைக்கால் (5,534), மாகி (1,216), ஏனாம் (2,825) இந்த தேர்வை எழுத உள்ளனர்.
புதுச்சேரியில் 107, காரைக்காலில் 14, மாகியில் 6, ஏனாமில் 10 தேர்வு மையங்கள் என மொத்தம் 137 தேர்வு மையங்களில் நடக்கிறது.
ஆவணங்கள்
தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள், ஹால்டிக்கெட்டில் அவர்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி கையொப்பமிட்டு எடுத்துவர வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் நுழைவுசீட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், பான்கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசலை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
தேர்வு மையத்தின் நுழைவு வாயில் சரியாக காலை 10 மணிக்கு மூடப்படும். அதற்கு பின்னர் தேர்வு மையத்தில் நுழைய அனுமதி கிடையாது. எனவே தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். கருப்பு வண்ண பால் பாய்ண்ட் பேனா, நுழைவுசீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை மட்டுமே தேர்வு மையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை
கைப்பைகள், செல்போன்கள், புளுடூத் சாதனங்கள், ஹெட்போன்கள், கால்குலேட்டர்கள், பென்டிரைவ் போன்ற இதர எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நுழைவுசீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recruitment.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாலம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிவரை 0413-2233338 என்ற எண்ணில் தொடர்புகொள்ள புதுவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கேட்டு கொண்டுள்ளது.