விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
|புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணியினர் 150 இடங்களில் வைத்து வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி
புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணியினர் 150 இடங்களில் வைத்து வழிபாடு நடத்தினர்.
21 அடி விநாயகர் சிலை
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை நகரப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சாரம் அவ்வை திடலில் 21 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சிவசங்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதுமட்டுமின்றி குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள் சார்பில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களிலும் விநாயகர் சிலைகள் வைத்த வழிபாடு நடந்தது.
வீடுகளில் வழிபாடு
இவைகள் தவிர ஆட்டோ சங்கத்தினரும் ஆட்டோ ஸ்டாண்டுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மார்க்கெட் பகுதிகள், முக்கிய வீதிகளில் விற்பனை செய்யப்பட்டன.
பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், களிமண் விநாயகர் சிலைகளை பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து வாங்கி சென்றனர். ரூ.50 முதல் ரூ.200 வரை விலை கொடுத்து அந்த சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் விநாயகருக்கு படைக்க அவல், பொரி, கரும்பு, கம்பு, பழங்களின் விற்பனையும் அதிக அளவில் நடந்தது.
திடீர் கடைகள்
மேலும் விநாயகருக்கு அணிவிக்க எருக்கம்பூ, அருகம்புல் மாலைகளும் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை சிறுவர்கள் வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்தனர். விநாயகர் சதுர்த்திக்கான பொருட்கள் விற்பனை செய்வதற்காக ஆங்காங்கே திடீர் கடைகளும் முளைத்திருந்தன.
மார்க்கெட், முக்கிய வீதிகளில் விநாயகர் சிலைகள், படைப்பதற்கான பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடை வீதிகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
22-ந்தேதி ஊர்வலம்
வீடுகளில் வைத்து வணங்கிய விநாயகரை பொதுமக்கள் கடலில் சென்று கரைக்க உள்ளனர். இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது.
அரியாங்குப்பம், தவளக்குப்பம்
அரியாங்குப்பம் மற்றும் தவளகுப்பம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. அரியாங்குப்பம் மார்க்கெட் பகுதியில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக பூஜை பொருட்கள், விநாயகர் சிலைகள் ஆகியவற்றை வாங்கி செல்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்திருந்தனர்.
சிறுவர், சிறுமியர்கள் மகிழ்ச்சியோடு தங்களது பெற்றோர்களோடு கடைவீதிக்கு சென்று விநாயகர் சிலையை வாங்கி சென்றனர். இதே போல் தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் விநாயகர் சிலை விற்பனை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நடைபெற்றது.