ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டம்
|காரைக்கால் அம்பகரத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
அம்பகரத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகல ரெயில்பாதை
காரைக்கால் முதல் நாகூர் வரையில் ரெயில் போக்குவரத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, நடைபெற்று வந்தது. வணிகர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் முதல் பேரளம் வரை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதில் அம்பகரத்தூர் ரெயில் நிலையம் அருகே திருவாரூர் மாவட்ட எல்லை பகுதி உள்ளது. காரைக்கால் - திருவாரூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் உள்ள ஜவகர் சாலையில் (பழைய ரெயிலடி சாலை) ரெயில்வே பாதையை மக்கள் கடந்து செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துதர வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதற்கான பணிகள் நடைபெறுவதாக தெரியவில்லை.
போராட்டம்
இந்தநிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ஜவகர் சாலை அருகே இன்று 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆனந்தன், துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
போராட்டத்தில், காரைக்கால்- பேரளம் அகல ரெயில்பாதையில் அம்பகரத்தூர் ஜவகர் சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. கிராம மக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.