வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு
|காலாப்பட்டு மத்திய சிறையில் வேலூர் சீர்திருத்த நிர்வாக அகாடமியினர் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகளை நல்வழிப்படுத்த யோகா, நடனம், இசை, கலை, கைவினைப்பயிற்சி, காலனி தயாரித்தல், கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வேலூர் சிறைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாக அகாடமியில் பயிற்சி பெறும் சிறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், புதுவை சட்டக்கல்லூரி 5-ம் ஆண்டு மாணவர்கள் என 70-க் கும் மேற்பட்டவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர், தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் கூறுகையில், சிறைவாசிகளை கையாள்வது சவாலானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் காணப்படுவர். அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நல்வழிப்படுத்த வேண்டும். சிறைச்சாலை என்பது ஒரு கல்விச்சாலையாக திகழ வேண்டும். கடந்த காலங்களில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறையில் கற்றுக்கொண்டவர்கள் தொழில் செய்து வருகிறார்கள்' என்றார்.