புதிய தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது
|கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.
புதுச்சேரி
கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மீது வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தரைப்பாலம்
புதுவை வேல்ராம்பட்டு, சிவா விஷ்ணு நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரானது மரப்பாலம் பகுதியில் 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் வழியாக கடலுக்கு செல்கிறது.
இந்த பாலம் மிகவும் குறுகியதாக இருந்ததால் அதை பெரிய அளவில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி பிரிகாஸ்டு (கான்கீரிட் பால பகுதிகளை வேறிடத்தில் தயாரித்து கொண்டு வந்து பொருத்துதல்) முறையில் தரைப்பாலத்தை அமைக்க பணிகள் நடந்தன. அதற்காக கடந்த 18-ந்தேதி இரவு முதல் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இந்திராகாந்தி சிலையிலிருந்து மரப்பாலம் நோக்கி வந்த கனரக வாகனங்கள் புவன்கரே வீதி வழியாக திருப்பிடப்பட்டன.
போக்குவரத்து தொடங்கியது
100 அடி சாலையில் பாதி பாலப்பகுதியை தோண்டி எடுத்து புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வந்தன. இந்த பணிகள் முடிந்த நிலையில் இன்று முதல் புதிய தரைப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. பாலத்தை 2 ஆக பிரித்து எதிரெதிர் திசைகளில் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
அடுத்ததாக எஞ்சியுள்ள பழைய பாலப்பகுதியை இடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் இங்கும் புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. ஒரு வார காலத்துக்குள் இங்கும் புதிய பாலம் அமைக்கப்பட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.