மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி
|புதுவை வேளாண் அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி
புதுவை குரும்பாப்பட்டில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்ரமணியன் கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.
மாடித்தோட்டத்தின் முக்கியத்துவம், தேவையான பொருட்கள் குறித்த தொழில்நுட்ப உரையை பண்ணை மேலாளர் அமலோற்பவநாதன் வழங்கினார். மாடி தோட்டங்களில் இயற்கை வழி உரமாக்குதல், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த செய்முறை பயிற்சியை அளித்தார். நுண்கீரை சாகுபடி குறித்த விளக்க உரையை தோட்டக்கலை வல்லுனர் பிரியதர்ஷினி வழங்கினார்.
மண்கலவை தயாரித்தல், ஜாடியில் மண் மாற்றுமுறை, நாற்றங்கால் உற்பத்தி முறை, செடிகள் நடுதல், நீர் மேலாண்மை மற்றும் முக்கிய தென்னை நாற்கழிவுகளை பயன்படுத்தி செடிகள் வளர்ப்பது குறித்த செய்முறை பயிற்சியை உதவி பயிற்சியாளர் சந்திரதரன் எடுத்துக்கூறினார். தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடி தோட்டத்தை பார்வையிட்டனர்.