4 வழிச்சாலைக்கு வந்த கடைகளால் போக்குவரத்து நெரிசல்
|மதகடிப்பட்டு வாரச்சந்தை வழியாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலைக்கு கடைகள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருபுவனை
மதகடிப்பட்டு வாரச்சந்தை வழியாக தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலைக்கு கடைகள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாரச்சந்தை
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதகடிப்பட்டில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு மாடு, விவசாய உபகரணங்கள், காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோக சாதனங்கள் விற்பது வழக்கம்.
இந்த சந்தையில் மாடுகள் வாங்குவதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாட்டு வியாபாரிகள் அதிகளவில் வருவார்கள்.
சந்தையில் அத்தியாவசிய பொருட்கள், பழங்கள், காய் கறிகள் வாங்கிட மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கண்டமங் கலம், அரியூர், வில்லியனூர், மடுகரை, திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் சந்தை நாட்களில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் களைகட்டும்.
போக்குவரத்து நெரிசல்
இந்தநிலையில் புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக மதகடிப்பட்டில் இருந்து மடுகரை செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மடுகரை செல்லும் வாகனங்கள் மதகடிப்பட்டு சந்தை வழியாக தற்காலிகமாக பாதை அமைத்து திருப்பி விடப்பட்டுள்ளன.
இன்று வாரச்சந்தை நடைபெற்றதால் அங்கு கடைகள் வைக்க முடியாமல் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் திணறினர். பெரும்பாலான வியாபாரிகள் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கடை விரித்து வியாபாரம் செய்தனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடுத்த வாரம் வாரச்சந்தை நடைபெறும்போது இதுபோன்று நடக்காமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.