புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
|புதுவை நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி
நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி புதுச்சேரி-கடலூர் சாலையில் நாளை (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
செடல் திருவிழா
புதுச்சேரியை அடுத்த நைனார்மண்டபத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் வரை நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி வடக்கு மற்றும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து மாற்றம்
நைனார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் தவளக்குப்பம் சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம், வில்லியனூர், இந்திரா காந்தி சிலை வழியாக புதுச்சேரிக்குள் வரவேண்டும். புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் வழியாக வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் வழியாக கடலூருக்கு செல்ல வேண்டும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் முருங்கப்பாக்கம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம், வேல்ராம்பேட் ஏரிக்கரை, மரப்பாலம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
கடற்கரை
இதேபோல் புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் அருகே நாளை மாலை விதை பந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். விழாவுக்கு பஸ், வேன், கார்களில் வருபவர்கள் இறங்கிவிட்டு வாகனங்களை பழைய துறைமுகத்தில் நிறுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோர் துய்மா வீதி தெற்கு பகுதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உடனிருந்தார்.