நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் மரியாதை
|புதுவையில் தியாகிகள் தினத்தையொட்டி நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி
தியாகிகள் தினத்தையொட்டி நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் மரியாதை செலுத்தினார்கள்.
8 மணிநேர வேலை
புதுவையில் பிரெஞ்சு ஆட்சி நடந்தபோது கடந்த 1936-ம் ஆண்டு மில் தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஜூலை 30-ந் தேதி அவர்கள் சவானா மில்லில் (தற்போதைய சுதேசி மில்) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்க பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கிகளுடன் மில்லை சூழ்ந்தது. தொடர்ந்து மில்லுக்குள் ராணுவம் நுழைந்ததால் தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
துப்பாக்கி சூடு
தொழிலாளர்கள், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ராணுவத்துடன் மோதினார்கள். ஆனால் ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் 12 தொழிலாளர்கள் பலியானார்கள்.
இந்த பிரச்சினை பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போதுதான் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் 8 மணிநேர வேலை உரிமை சட்டமும், தொழிற்சங்க உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 1937-ம் ஆண்டில் இருந்து புதுவையில் 8 மணிநேர வேலை அமலாக்கப்பட்டது. பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலியான தொழிலாளர்கள் நினைவாக ஜூலை-30-ந் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று ஜூலை-30 தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
பஞ்சாலை தொழிலாளர்கள்
இதையொட்டி கடலூர் சாலையில் உள்ள தொழிலாளர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் மூர்த்தி தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். தியாகிகள் கொடியை முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பஞ்சாலை தொழிலாளர் சங்க தலைவர் அபிசேகம், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச்செயலாளர் சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சி.ஐ.டி.யு.
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமையில் ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தினார்கள். இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், மில் தொழிலாளர்கள் சங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
ஏ.ஐ.யு.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மாநில தலைவர் சங்கரன் தலைமையில் மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாநில செயலாளர் சிவக்குமார், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.