புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
|புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுச்சேரி
புதுவையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக இன்று இதமான சூழ்நிலை நிலவியது. சுற்றுலா பயணிகள் வருகையால் கடற்கரை, பாண்டி மெரினா பீச், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்கள் களை கட்டியது.
பாண்டி மெரினாவில் ஒட்டகம், குதிரை சவாரி செய்யவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
சண்டே மார்க்கெட்
ஒயிட் டவுண் பகுதியில் வெளிநாட்டு, வெளிமாநில பெண்கள் நாகரிக உடையணிந்து ஒய்யாரமாக வலம் வந்ததை காண முடிந்தது. அவர்கள் அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருந்த ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட் செயல்படும் காந்தி வீதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
இறைச்சி கடைகளில் கூட்டம்
புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் இந்துகள் விரதம் இருந்து பெருமாளை வழிபாடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நேற்று விடைபெற்றதால் பொதுமக்கள் கோழி, இறைச்சி வாங்க கடை வீதிகளில் குவிந்தனர். இதனால் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும், பெரிய மார்கெட்டில் உள்ள மீன்கடைகளிலும் கூட்டம் களை கட்டியது.
புதுவையில் இன்று ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.220-க்கும், ஆட்டு இறைச்சி ரூ.600 முதல் ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது.