பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
|புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நாளை அரசு விடுமுறை அறிவித்துள்ளது
புதுச்சேரி
வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.
2 நாட்களாக மழை
புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. ,இன்று காலை வெயில் முகம் காட்டாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
புறநகர் பகுதியான பாகூர், அரியாங்குப்பம், கன்னியகோவில், நெட்டப்பாக்கம், வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. எப்போதும் மழை தூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. புதுவை வந்த சுற்றுலா பயணிகள் வெளியே வரமுடியாமல் ஓட்டல் அறைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். உள்ளூர் மக்களும் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. இதனால் கடை வீதிகள் வழக்கமான கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன.
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஏற்கனவே புதுச்சேரி விடுதலை நாள் மற்றும் கல்லறை திருநாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தற்போது மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு இன்றும் விடுமுறை அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதை யொட்டி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுப்பது, பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளிகள், சமுதாயக்கூடங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள், மணல் மூட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பாகூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
6-ந்தேதி வரை மழை
இந்தநிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை (வியாழக்கிழமை) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
'ஆரஞ்சு' எச்சரிக்கை
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
5-ந் தேதி (சனிக்கிழமை), தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மேற்சொன்ன 2 நாட்களிலும் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடிய 6 மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியில் விடுக்கப்படும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கிறது.
15 மாவட்டங்களில் கனமழை
6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக் காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.