மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்ககண்காணிப்பு குழு
|மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
காரைக்கால்
மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் காரைக்கால் மாவட்ட போலீசார், கல்வி துறையுடன் இணைந்து போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்திற்கு மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் (வடக்கு), முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
கூட்டத்தில் பேசிய ஆசிரியர்கள், பள்ளிக்கூடம் அருகில் பெட்டிக்கடைகளில் குட்கா போன்ற புகையிலை, போதை பொருட்கள் விற்கப்படுகிறது. அதனை தடுக்கவேண்டும். மாணவர்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்கின்றனர். இதனால் உயிரிழப்புகள், உடல் ஊனம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் பேசியதாவது:-
கண்காணிப்பு குழு
காரைக்கால் மக்கள் நலனுக்காக போலீசார் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது கடுமையான குற்றமாகும். செல்போன் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை இயக்குவது அதிகமாக உள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிள், கார் ஓட்டுவதை தவிர்க்கவேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க உடற்கல்வி ஆசிரியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து மாணவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் போதை தடுப்பு குழு இல்லை. எனவே அதை செயல்படுத்தி மாணவர்களை ஒழுங்குப்படுத்த ஆசிரியர்கள் முன்வரவேண்டும். போதை பொருட்கள் பயன்பாடு குறித்து ஏதாவது தகவல் கிடைத்தால், ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
பாலியல் அச்சுறுத்தல்
பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்களில் மாணவிகள், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான அச்சுறுத்தல்கள் இருந்தால் அதனை ஆசிரியர்கள், போலீசாருக்கு தெரிவிக்கவேண்டும். இதன் மூலம் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
காரைக்காலில் தனியாக சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதால் பாலியல், சமூக வலைதள மோசடிகள் குறித்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.