பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்
|புதுவையை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
புதுவையை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
உயர் கல்வி கண்காட்சி
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பகம் சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்திதிடலில் உயர் கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில் தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
பிற மாநிலங்களில் வேலை
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் எந்த கல்லூரிக்கு செல்லலாம், என்ன படிப்பினை தொடரலாம், அதற்குரிய வாய்ப்புகள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள இது போன்ற கண்காட்சி மிகவும் அவசியமாகும். இந்த வழிகாட்டி கண்காட்சி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரிகள் அதிகம் உள்ளன. கல்விக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. புதுவையில் பள்ளி, கல்லூரி கல்வி இலவசமாக அரசு வழங்கி வருகிறது.
பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல நிறுவனங்களில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் பெற்றோர் எண்ணம். அதற்கு ஏற்றார் போல கல்வி வழங்கப்படுகிறது. அரசு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். அதற்குரிய வாய்ப்பு புதுச்சேரியில் இருந்தாலும் பிற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் வாய்ப்பினை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அங்கு சென்றும் பணியாற்ற வேண்டும். அதற்குரிய படிப்புகளை தேர்வு செய்வது மிகவும் அவசியம். இவற்றையெல்லாம் வழிகாட்டும் கண்காட்சியாக இது அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
30 ஸ்டால்கள்
நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரி நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை நடக்கும் இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிறைவு பெறுகிறது