ரெயில்வே சூப்பிரண்டுக்கு மிரட்டல்
|புதுவையில் ரெயில்வே சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புதுச்சேரி
ரெயில்வே சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மிரட்டல்
புதுவை ரெயில் நிலையத்தில் ரூ.72 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள ரெயில்வே துறை அதிகாரிகள் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கு உதவியாகவும், தேவையான பணிகளை செய்து கொடுக்குமாறும் ரெயில் நிலைய சூப்பிரண்டு முகேஷ்குமார் (வயது 46) ஊழியர் கலைமணியிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலைமணி, முகேஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பணியிடைநீக்கம்
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு முகேஷ்குமார் புகார் தெரிவித்தார். மேலும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் வழக்குப்பதிவு செய்து கலைமணியை வலைவீசி தேடி வருகிறார்.
இந்தநிலையில் ரெயில்வே சூப்பிரண்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த கலைமணியை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அதற்கான கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான விசாரணையும் நடக்கிறது.