வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும்
|மழை காலத்திற்கு முன் வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால்
காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்தமான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தையில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சந்தையில் விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் விலை மலிவாகவும், தரமாகவும் இருப்பதால் காரைக்கால், திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.
400-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடும் இந்த சந்தையில் சுமார் 80 பேர் வியாபாரம் செய்யும் அளவுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற வியாபாரிகள் கடும் வெயிலிலும், மழையின்போது சேறும் சகதியிலும் கடைவிரித்து அவதிப்பட்டு வருகின்றனர். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.
குடிநீர், கழிவறை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக வாரச்சந்தையில் சிமெண்டு தரை அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.