சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
|இரும்பு கதவு மீது ஏறி குதித்து விளையாடிய சிறுமி, சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
கோட்டுச்சேரி
இரும்பு கதவு மீது ஏறி குதித்து விளையாடிய சிறுமி, சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
இரும்பு கதவில் விளையாட்டு
காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இத்தம்பதிக்கு யோஹானா (வயது 12), சஞ்சுஸ்ரீ (9), சஞ்சனா (7) என்ற 3 மகள்களும், சாய் (5) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று இரவு சாப்பிட்டு விட்டு பிள்ளைகள் வீட்டின் வாசலுக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் இரவு 10 மணிக்கு வீட்டின் முகப்பில் இருந்த இரும்பு கதவின் மீது 3-வது மகள் சஞ்சனா, மகன் சாய் ஆகியோர் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.
சுவர் இடிந்தது
அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கதவு (கிரீல் கேட்) எடை தாங்காமல் சரியத் தொடங்கியது. கூடவே இரும்பு கதவுடன் பொருத்தப்பட்டிருந்த சுவரும் குழந்தைகள் மீது இடிந்து விழுந்தது. இதில் சஞ்சனா இடிபாடுகளில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்த்து அவ்வழியே சென்ற கஜேந்திரன் என்பவர் குரல் கொடுத்தார். சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து குழந்தைகளை மீட்டனர்.
இதில், படுகாயமடைந்த சிறுமி சஞ்சனாவை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சஞ்சனாவைப் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.