டிரான்ஸ்பார்மர் வெடித்தது; 19 மணி நேரம் மின்தடை
|தவளக்குப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 19 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 19 மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மின்தடை
தவளக்குப்பம் பகுதியில் மின் துறை சார்பில் இளநிலை பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகம் உள்ளது. இதில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக 60-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தவளக்குப்பம் பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் பழுதை சரிசெய்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.
டிரான்ஸ்பார்மர் வெடித்தது
இந்த நிலையில் நல்லவாடு ரோடு தானம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென படார் என்ற சத்தத்துடன் வெடித்து தீப்பொறி வந்தது. இதைத்தொடர்ந்து மின்துறை ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் நள்ளிரவில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் மீண்டும் அதே டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது. இதனால் அம்மா நகர், அங்காளம்மன் நகர், மகாலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், புது நகர், தானம்பாளையம், தவமணி நகர், சீனிவாசா நகர், ராஜீவ் காந்தி நகர், இளவரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
19 மணிநேரம் மின்தடை
இன்று காலை 10 மணி அளவில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியில் மின்துறை இளநிலை பொறியாளர் திருமுருகன் தலைமையிலான ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்பணிகள் நிறைவடைந்து மின் இணைப்பு இன்று மாலை 6.30 மணிக்கு மேல் வழங்கப்பட்டது. புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டு, 19 மணி நேரத்திற்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.