< Back
புதுச்சேரி
டாக்டர்கள், பேராசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரி

டாக்டர்கள், பேராசிரியர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
24 Jun 2022 5:58 PM GMT

புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவர்கள், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து மருத்துவர்கள், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜிப்மர் மருத்துவமனை

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுவை, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஜிப்மரின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக மருந்து தட்டுப்பாடுகள், நோயாளிகள் அலைக்கழிப்பு, இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதனை கண்டித்து புதுவை அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின.

புதுவை சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து ஜிப்மர் நிர்வாகம் மீது புகார் தெரிவித்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து அங்கு பணியாற்றும் டாக்டர்கள், பேராசிரியர்கள் அடங்கிய பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக வளாகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ரவிந்தரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ்குமார், துணை தலைவர் பாலமுருகேசன் கந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில், ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் பொறுப்பேற்றது முதல் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடைகள் வழங்குவதில்லை, ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாகவும், அது தொடர்பாக கோப்புகள் அனுப்பினால் நடவடிக்கை எடுக்காமல் ஜிப்மர் இயக்குனர் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்தநிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் நாளை (சனிக்கிழமை) பொது சுகாதார பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டேவியா பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்