மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம்
|புதுவையில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி
புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் 13 பேரை சேர்க்கவேண்டும். ஆனால் சென்டாக் நிர்வாகம் 9 மாணவர்களை மட்டுமே சேர்த்து 4 பேரை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்து அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16 லட்சம் தேவையில்லாத செலவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெற்றோர்களும் கூடுதலாக பணம் செலவிட வேண்டி உள்ளது. 10 சதவீத இடஒதுக்கீட்டை போராடி பெற்று தந்த கவர்னருக்கும், என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் மருத்துவ கல்லூரியில் இடமளிக்கப்பட்ட 4 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடமளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.